உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் நடைபெறும் தேரோட்டவிழா வத்திராயிருப்பு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.  சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளை களைந்து இந்த விழாவில் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 12 வருடங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.   தற்போது கோயில் உயரம் அதிகரித்தல் உட்பட மராமத்துப்பணிகளும், கோபுரம் புதுப்பிக்கப்பட்டும் கும்பாபிஷேகம் நடந்தது.   செப். 8 ல் இதற்கான யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.   வாஸ்துசாந்தி,  மூன்றுகால யாகசாலை வழிபாடுகள் நடந்தது.  இறுதிகால யாகபூஜைகளும், கஜபூஜையும் முடிந்ததும் சிவாச்சார்யார்கள் பூஜிக்கப்பட்ட கும்பநீரை சுமந்தபடி கோயிலை வலம் வந்தனர்.  பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.  பின்னர் கும்பநீரால் கோபுரகலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து கருவறையில் உள்ள அம்மன் பீடத்திற்கும் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.   சென்னை தொழிலதிபர்கள் முனியசாமி, கருணையானந்தம் சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   சென்னை தொழிலதிபர் அசோக் துவக்கிவைத்தார்.   கோயில் விழாக்குழுவினர், பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !