உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிவகங்கை: பிரசித்தி பெற்ற காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் காலை 10:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். கருட பகவான் 3 முறை வானத்தில் வட்டமிட பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘ஓம் நமச்சிவாயா’ கோஷம் விண்ணை முட்ட கும்பாபிஷேகம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில் மூன்று ஈஸ்வரர், அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகளை கொண்ட மும்மூர்த்திகள் ஸ்தலம் என்ற சிறப்பு பெற்றது. பாவ விமோசனம் நீக்கும் 1008 சகஸ்ரலிங்கம் மற்றும் ‘இரட்டை ராஜகோபுர ஆலயம்’ என்று சிறப்பு பெற்ற சிவஸ்தலம். இங்கு 1998ல் கும்பாபிஷேகம் நடந்தது. 17 ஆண்டுக்கு பின் உபயதாரர்கள் நிதியில் சில மாதங்களாக திருப்பணி நடந்தது. செப்டம்பர் 3ம் தேதி கணபதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் செப்டம்பர் 6ல் முதல் காலயாகசாலையுடன் விழா துவங்கியது. காலை 4:30 மணிக்கு 6வது காலயாகசாலை பூஜையும்,6:45 மணிக்கு பரிவார மூர்த்திகள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

ராஜகோபுர அபிஷேகம்: காலை 10:10 மணிக்கு யாகசாலையில் இருந்து 37 கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து கோயிலுக்கு வந்தனர். அப்போது 4 கருட பகவான் ராஜகோபுரத்தை சுற்றி வானத்தில் 3 முறை வட்டமிட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் சிறிய ராஜகோபுரத்தில் 5 கலசம், பெரிய ராஜகோபுரத்தில் 9 கலசம் உட்பட 25 விமானத்தில் உள்ள 37 கலசங்களில் காலை 10:45 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ‘ஓம் நமச்சிவாயா’ கோஷம் விண்ணை முட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். விசை தெளிப்பான் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின், மாலை 5 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

50 ஆயிரம் பக்தர்: சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி பிற மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆன்மிக அன்பர்கள் குழு சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !