ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது; ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.வைணவ தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில், கும்பாபிஷேகம் 2001ம் ஆண்டு நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முழுமை பெற்றதையடுத்து, முதல்கட்டமாக தெற்கு மற்றும் கிழக்கு, ரெங்கா ரெங்கா வாயில் கோபுரங்கள் உட்பட 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னதிகளுக்கும் நேற்று காலை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.முதல் கால யாக சாலை பூஜைகள், கடந்த 7ம் தேதி இரவு 7:30 மணிக்கு துவங்கியது. இரண்டாம் கால யாக பூஜையின் போது செங்கமல நாச்சியார், பார்த்த சாரதி, வேணுகோபால ஸ்வாமி, ஹயக்கிரீவர் சன்னிதிகளில் புதிய செப்புக் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மூன்றாம் கால யாக பூஜையின் போது, முதல் கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து சன்னிதிகளின் மூர்த்திகளுக்கும், கோபுரங்களுக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த நான்காம் கால யாக பூஜையில், பிரபந்த ஸேவை, திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளியெழுச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை 5:15 மணிக்கு, வேத கோஷங்களுடன் புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் புறப்பட்டன. காலை 6:30 மணிக்கு, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும் நரசிம்ம பட்டர் தலைமையிலான, 33 பட்டாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து வேதசாற்று முறை, பிரபந்த சாற்று முறை, கோஷ்டி மரியாதை செய்யப்பட்டது.