உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணகாளீஸ்வரருக்கு 17 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேகம்!

சொர்ணகாளீஸ்வரருக்கு 17 ஆண்டுகளுக்குப்பின் கும்பாபிஷேகம்!

சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 10:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். கருடன் 3 முறை வானத்தில் வட்டமிட, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் "ஓம் நமச்சிவாயா கோஷம் விண்ணை முட்ட கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில்,நேற்று காலை 4:30 மணிக்கு 6வது காலயாகசாலை பூஜையும்,6:45 மணிக்கு பரிவார மூர்த்திகள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை 10:10 மணிக்கு யாக சாலையில் இருந்து 37 கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து கோயிலுக்கு வந்தனர். அப்போது கருடன் ராஜகோபுரத்தை சுற்றி வானத்தில் 3 முறை வட்டமிட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் சிறிய ராஜகோபுரத்தில் 5 கலசம், பெரிய ராஜகோபுரத்தில் 9 கலசம் உட்பட 25 விமானத்தில் உள்ள 37 கலசங்களில் காலை 10:45 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின், மாலை 5 மணிக்கு மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி பிற மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆன்மிக எட்டாம் நாளான இன்று மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !