சென்னிமலை கோவில் தேர் வெள்ளோட்டம்: 2 மணி நேரத்தில் இழுத்து சென்ற பக்தர்கள்!
சென்னிமலை: சென்னிமலை முருகப்பெருமானின் தைப்பூச விழா திருத்தேருக்கு, புதிதாக சக்கரம் பொருத்தி, நேற்று வெள்ளோட்டம் நடந்தது. சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தைப்பூச விழாவில், ரத வீதிகளில் உலா வரும் பெரிய மரத்தேருக்கு, நான்கு நாட்டு கவுண்டர்களால் புதிதாக இரும்பு அச்சு மற்றும் இரும்பு சக்கரம், 7.75 லட்சம் ரூபாயில், திருச்சி பெல் நிறுவனத்தால் செய்து, பொருத்தப்பட்டது. இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட தேரின் வெள்ளோட்டம், நேற்று காலை, 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சிறப்பு பூஜையுடன் துவங்கியது. தேர்நிலை அருகே யாகபூஜை, பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காலை, 9.10 மணிக்கு தலைமை குருக்கள் ராமநாதசிவம் சிறப்பு பூஜை செய்து, கலசம் தேர் மீது வைக்கப்பட்டு, வெள்ளோட்டம் துவங்கியது. காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷணன், யூனியன் தலைவர் கருப்புசாமி, டவுன் பஞ்., தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., பூந்துறை பாலு, செந்தில்நாதன், மெட்றொ டெக்ஸ் தலைவர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததாலும், புதிய இரும்பு சக்கரம் அதிக எடை கொண்டதாலும், தேரை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. பின்னர், ஒரு பொக்லைன் இயந்தரம் கொண்டு வரப்பட்டு, கட்டி இழுத்தனர். அப்போது தேர் நகர்வதில் சிரமம் ஏற்பட்டதால், மற்றொரு பொக்லைன் கொண்டு வரப்பட்டு, பின்புறம் இருந்து தள்ளப்பட்டது. இயந்திரங்கள் தள்ளவும், பக்தர்கள் இழுக்கவும், தேர் நகர்ந்தது. சரியாக இரண்டு மணி நேரத்தில், நான்கு ரத வீதிகளை சுற்றி, நிலைக்கு வந்தது. தேர்நிலை அருகே மேலும் சில பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை எழுத்தர் ராஜீ, மற்றும் நான்கு நாட்டு கவுண்டர்கள் செய்திருந்தனர்.