தாயமங்கலம் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரம்
இளையான்குடி: தாயமங்கலத்தில் புதிய ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடன் செ<லுத்துகின்றனர் .வெள்ளி,செவ்வாய், ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனியில் நடக்கும் பத்து நாள் திருவிழாவின் போது சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியானதும் இக்கோயிலுக்கு வந்து அக்னி சட்டி, ஆயிரங்கண்பானை எடுத்தும்,குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்தி செலுத்துகின்றனர். இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மூன்று நிலை ராஜகோபுரம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலை சுற்றி பிரகாரம் மண்டபம் கட்டப்பட்டது. பிரகார மண்டபம் உயரமானதால் மூன்று நிலை ராஜகோபுரம் வெளியே முழுமையாக தெரியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் புதிய ராஜகோபுரம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில்,கோயில் நிதியில் இருந்து புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு, அறநிலையத்துறை அனுமதியளித்ததை தொடர்ந்து முதல் கட்டமாக ரூபாய் 70 லட்சம் மதிப்பில் கல்காரம் வரை கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கி வேகமாக நடந்து வருகிறது.