நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கஞ்சிக்கலய ஊர்வலம்
உடுமலை: உடுமலை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், நேற்று நகரில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது; நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை, சர்தார் வீதி, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் செயல்படுகிறது. வழிபாட்டு மன்றத்தில், ஆடிப்பூர கஞ்சிக்கலய பெருவிழா, செப்., 11ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது; மாலையில் கலச விளக்கு வேள்வி நடந்தது. தொடர்ந்து இருநாட்களாக, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான, கஞ்சிக்கலய ஊர்வலம், நேற்று காலை, 8:00 மணிக்கு, உடுமலை மாரியம்மன் கோவில் முன் துவங்கியது; மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். கோவில் முன் துவங்கிய ஊர்வலம், நெல்லுக்கடை வீதி, குட்டைத்திடல், தளி ரோடு, நகராட்சி ரோடு வழியாக நேருவீதியை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு, ராஜேந்திரா ரோடு வழியாக, சர்தார் வீதி, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில் உள்ள வழிபாட்டு மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வல நிறைவில், கஞ்சி வார்க்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.