சென்னிமலை கோவில் பண வசூலில் முறைகேடு!
ஈரோடு: கோவில் கும்பாபிஷேகத்தை பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலாளர் மீது புகார் எழுந்துள்ளது. சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பழம் பெருமை வாய்ந்தது. கடந்தாண்டு, ஜூலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகம், அன்னதானம், திருப்பணி உள்ளிட்ட பெயரில், பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்து உள்ளது. இதற்கு கோவில் செயல் அலுவலரும் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு, நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தமிழக சட்டசபை கூடிய நிலையில், அ.தி.மு.க,, எம்.எல்.ஏ., மீது புகார் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலையில், உள்ள லஞ்ச - ஊழல் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கூறியதாவது: சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம், 2014 ஜூலை, 7ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வசூலிக்கப்பட்டது. இதில், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், சென்னிமலை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், பல லட்சம் ரூபாய் பெற்று கொண்டு உரிய ரசீது வழங்காமலும், போலியாக ரசீது புத்தகம் தயார் செய்தும், மோசடி செய்துள்ளனர். தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இவரது செயலுக்கு கோவில் செயல் அலுவலர் பசவராஜன் உடந்தையாக இருந்துள்ளார். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலில், பதவி, அதிகாரத்தை பயன்படுத்தியும், அதிகாரிகள் அனுமதி பெறாமலும், தனி நபராக நன்கொடை வசூல் செய்துள்ளார். யாக சாலைக்கு அருகில், 10க்கும் மேற்பட்ட பண வசூல் மேடைகள் அமைத்து நன்கொடை வசூலித்துள்ளார். தன் சொந்த பெயரில், எம்.எல்.ஏ., வங்கி கணக்கு துவங்கி, வரவு, செலவு வைத்துள்ளார். இதுவரை நன்கொடையாக பெற்ற தொகை, செலவு குறித்து விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இதுநாள் வரை நன்கொடையான தொகையை வைத்து கொண்டு, கையாடல் செய்து வருகிறார். நன்கொடை ரசீதுகளில் தொடர் எண் அச்சிட்டும், அச்சிடாமலும் பண வசூல் செய்துள்ளார். கும்பாபிஷேகம் மட்டுமின்றி, அன்னதானம் என்ற பெயரிலும் மோசடி நடத்தி உள்ளார். எனவே எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இப்பிரச்னையை முன்னிலைப்படுத்தி வரும், 26ம் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில், நீதிமன்ற அனுமதியுடன் பொதுக்கூட்டம் நடக்கிறது. மோசடி பண வசூல் குறித்து, கலெக்டர் மூலம் தமிழக முதல்வர் கவனத்துக்கு பிரச்னையை கொண்டு செல்லும் விதமான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம். இப்பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.