உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் ஆசிய மெகா விநாயகருக்கு கும்பாபிஷேகம்!

திண்டுக்கல்லில் ஆசிய மெகா விநாயகருக்கு கும்பாபிஷேகம்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 115 டன்னுள்ள ஒரே கருங்கல்லில் உருவான, ஆசியாவிலேயே மிகப்பெரிய (32 அடி உயரம்) மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் மேற்குகரையில் 200 ஆண்டுகால பழமையான நன்மை தரும் விநாயகர் கோயில் இருந்தது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் மங்கள விநாயகர், அன்பு, மாணிக்கம், பால, கஜமுக, கருணை, ஆனந்த உள்ளிட்ட பெயர்களில் 108 விநாயகர் சிலைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின் நன்மைதரும் 108 விநாயகர் கோயில் என, அழைக்கப்படுகிறது. அதே கோயில் வளாகத்தில் 2013 செப்டம்பரில் 115 டன்னுள்ள ஒரே கருங்கல்லில் ஆன 32 அடி உயர மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இது ஆசியாவிலே மிக பெரிய சிலை. இந்த சிலைக்கான கல் திருப்பூர் வெள்ளியம்பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. சிலை திருப்பூர் பூண்டி திருமுருகன் சிற்பக்கலை கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. சிலை பிரதிஷ்டைக்கு பின் கோயில் மகா மண்டபம் கட்டப்பட்டது. தற்போது இக்கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 9:45 மணிக்கு நடக்கிறது. நிர்வாக அறங்காவலர் மருதநாயகம் கூறியதாவது: விநாயகர் சிலை உயரத்திற்கு தகுந்த 50 அடி மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. எங்குமில்லாத சிறப்பாக விநாயகரின் திருமுடியில் சிவன் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கு முன்பாக 4 டன்னுள்ள 5 அடி உயரம், 6 அடி நீள மூஞ்சூறு வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் சீனிவாச பெருமாள், அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, மதுரைவீரன், கருமாரியம்மன் சன்னதிகள் உள்ளன. நன்மை தரும் விநாயகர் கருவறைக்கு முன் நவக்கிரகங்கள் உள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !