பெரம்பலுார் அருகே ஓர் அதிசயம்: புவியியல் படிமமாக சாத்தனுார் கல் மரம்!
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம் ஆலத்துார் தாலுகாவில் உள்ளது சாத்தனுார் என்ற குக்கிராமம். இக்கிராமத்தில் புவியியல் படிமமாக கல் மரம் ஒன்று காட்சிக்கு உள்ளது. சாத்தனுார் கிராமத்துக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனுாருக்கு மேற்கே 8 முதல் 10 கோடி கிலோ மீட்டர் வரையிலும் பரவி இருந்ததாக புவியியல் வரலாறு கூறுகிறது. புவியியல் சாத்திரப்படி க்ரிடேஷஸ் காலம் எனக் கூறப்படும் அக்காலத்திலும் இன்று கடலில் காணும் உயிரினங்களைப் போன்ற பலவித பிராணிகள் இருந்ததாகவும், அந்த உயிரினங்கள் இறந்த பிறகு ஆறுகளினால் அடித்துவரப்பட்ட மணல், களிமண் இவற்றால் மூடப்பட்டுக் கடலின் அடியில் அமிழ்ந்தன என்றும், கடலோரப் பகுதிகளிலும் அதன் சமீப இடங்களிலும் தழைத்து வந்த மரங்களும் ஆற்று வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு இப்பிராணிகளுடன் கடலில் அமிழ்ந்து காலப்போக்கில் கல்லுருவாக மாறி இருப்பதாக வரலாறு உள்ளது.
1957ம் ஆண்டு அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த சாத்தனுார் கிராம பகுதியை ஆய்வு மேற்கொண்ட டேராடூன் வன ஆராய்ச்சி கழக தலைவர் கிருஷ்ணசாமி ஐயரால் இந்த கல் மரம் கண்டறியப்பட்டு பின்னர் இது குறித்து இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 12 அடி நீளம் கொண்ட இந்த கல் மரம் தற்போது புவியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனடிப்படையில் சாத்தனுாரில் கல்லுருவாக காணப்படும் பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பறையினப்பகுதியில் அமைந்திருப்பதாகவும், பூக்கள் உள்ள தாவர இனம் தோன்றுவதற்கு முன்பு இருந்த பூக்கள் இல்லாத நிலத்தாவர இனமான கோனிபர்ஸ் வகையைச் சேர்ந்ததே இம்மரம் என்று புவியியல் வல்லுநர்களால் கணிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
அதியசம்போல் புவியியல் படிமமாக காணப்படும் சாத்தனுார் கல் மரம் போற்றி பாதுகாக்க வேண்டிய வரலாற்று பொக்கிஷம் ஆகும். எனவே கல்மர பூங்காவில் தற்போது இருக்கின்ற நுழைவு வாயில் கல்மரத்தின் அடிப்பகுதியினை மறைத்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனை சிறிது துõரம் தள்ளி அமைக்கவும், கல்மரத்தை சுற்றி இரும்பு கம்பிகளினால் ஆன தடுப்பு வேலி அமைக்கவும், கல்மரத்திற்கு எதிர் புறம் சுற்றுலாத்துறை நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக கட்டிடத்தில் காட்சி பொருட்களை நிரப்பி பல்துறை அருங்காட்சியகமாக அமைக்கவும், இந்த கல் மரத்தை பாதுகாக்க புவியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.