புரட்டாசி மாதம் எதிரொலி: திருமலைக்கு டிக்கெட் இல்லை
ஈரோடு: திருமலையில், தீபாவளி வரையிலான ஸ்வாமி சேவை தரிசன டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக, ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் நிர்வாகி தெரிவித்துள்ளார். திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், தமிழகத்தில் ஈரோடு, சென்னை, வேலூர், கோவை, திருப்பூர், மதுரை, கன்னியாக்குமரி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில், ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுப்ரபாத சேவை, கல்யாண சேவை, ஊஞ்சல் சேவை, விசேஷ பூஜை, ஆர்ஜித சேவை, அஷ்டதனபாதம், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், 50 ரூபாய் தரிசன டிக்கெட்டை பெற்று கொள்ளலாம். தங்கும் வசதியும், ஏற்பாடு செய்து தரப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் திருப்பதிக்கு செல்ல பக்தர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு, ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் சேர்மன் உமாபதி கூறியதாவது: திருமலையில் தினமும் நடக்கும் அனைத்து சேவா டிக்கெட்களும், தீபாவளி வரை விற்று தீர்ந்துவிட்டன. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், 29ம் தேதிக்கு பின்னரே குறைந்த அளவில் விற்பனைக்கு உள்ளது. தினமும் காலை, 11 முதல், 7 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கேட்கும் நேரத்தில், டிக்கெட் பெறலாம். இதே போல், 50 ரூபாய்க்கான தரிசன டிக்கெட் அக்., மாதத்தில் சில நாட்களாக தேக்கமடைந்துள்ளது. தினமும் ஒரு முறை மட்டுமே, இதற்கு டிக்கெட் வழங்கப்படும். தரிசன நேரம், நாளை முன் கூட்டியே திட்டமிட்டு, டிக்கெட் பெற்று கொண்டு, திருமலைக்கு செல்லலாம். டிக்கெட்டுக்கு திருமலையில் இரண்டு லட்டு இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக இரண்டு லட்டுகள் வழங்கப்படும். இதற்கான கட்டணத்தை சேவா டிரஸ்ட் அலுவலகத்தில், முன் கூட்டியே செலுத்தி டிக்கெட் பெறலாம். அங்கு வரிசையில் நிற்க தேவையில்லை. ஆண்டுதோறும் புரட்டாசியில், திருமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிற மாதங்களில் சற்று கூட்டம் குறைவாக உள்ளது. இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் வருகிறது. தற்போது ஒன்று நடக்கிறது. அக்., மாதம் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும். நான்கு ஆண்டுக்கு ஒரு முறை, இதுபோன்ற நிகழ்வு நடக்கும். எனவே, இந்தாண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது. அலமேலு மங்காபுரம், சீனிவாச மங்காபுரத்தில் நடக்கும் சேவா தரிசனத்துக்கு முன்பு, முன்பதிவு டிக்கெட் வழங்கப்பட்டது. பின்னர் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. விரைவில் மீண்டும் வழங்க அனுமதிக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.