உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி வீட்டுக்கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு!

மழை வேண்டி வீட்டுக்கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு!

திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள பச்சைமலை கிராம மக்கள், மழை வேண்டி, வீட்டுக்கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள பச்சைமலையில், கடந்த, நான்கு ஆண்டுகளாக எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இதையடுத்து, கோம்பை பஞ்சாயத்துக்குட்பட்ட செம்புளிச்சாம்பட்டி, போந்தை, மருதை, வண்ணாடு பஞ்சாயத்துக்குட்பட்ட ராமநாதபுரம், தண்ணீர்பள்ளம் கிராம மக்கள், மழை பெய்ய வேண்டி, வீடுகளின் கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, ராமநாதபுரத்தில் உள்ள கறுப்பு கோவிலில், ஐந்து கிராம மக்களும் ஒன்றிணைந்து, ஆட்டுக்கிடா பலியிட்டு வழிபாடு நடத்தினர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: பச்சைமலைப்பகுதியில் உள்ள கிராமங்களில், கடந்த, நான்கு ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டது. அதனால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. குடிநீருக்கு கூட, வெகு தூரம் சென்று எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. பருவமழை பொய்த்து விட்டால், முன்னோர், இது போன்ற வழிபாடு நடத்தினர். அப்போதெல்லாம் மழை பெய்து, விவசாயம் செழித்துள்ளது. அதனால், கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து, வீட்டு கதவில் சாணம் பூசி வழிபாடு நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !