தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்!
புதூர்: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா காலை 10.45 மணிக்கு நடந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றம் செப்., 17ல் நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். செப்., 18 முதல் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள் தல்லாகுளம் பகுதிகளில் வலம் வந்தார். செப்., 24ல் காலை தேரோட்டமும், இரவு பூப்பல்லக்கும், செப்., 25ல் காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7 மணிக்கு சப்தாவரணம் சாற்றுமுறை முடிந்து, 8 மணிக்கு பூச்சரப்பத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 10.20 மணிக்கு தேவியருடன் பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் அப்பகுதியை சுற்றி வலம் வந்தார். காலை 10.45 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி ஒருமுறையும், மாலையில் 2 முறையும் வலம் வந்தார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.