உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தீவிரம்

நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தீவிரம்

சேலம்: நவராத்திரி விழா நெருங்கும் நிலையில், கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. சேலம், சின்னக்கடைவீதி ராஜாஜி காதிபவன் விற்பனை நிலையத்தில், ஆண்டு தோறும் நவராத்திரி விழாவையொட்டி, கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கும். சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு கொலு பொம்மைகளை வாங்கிச் செல்வர். நடப்பாண்டு கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த, 17ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. இது குறித்து ராஜாஜி காதிபவன் மேலாளர் ரவி கூறியதாவது: நவராத்திரி கொலுவுக்காக, மதுரை, புதுச்சேரி, காஞ்சீபுரம், மகாராஷ்டிரா மற்றும் கொல்கத்தாவில் இருந்து விதவிதமான பொம்மைகள் வரவழைத்து விற்பனை செய்து வருகிறோம். இங்கு, 30 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை, பொம்மைகள் விற்பனைக்காக வைத்துள்ளோம். மேலும், இந்தாண்டு புது வரவாக, 4,500 ரூபாய்க்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் பொம்மையும், 4, 250 ரூபாயில் திருத்தனி முருகன் பொம்மையும், 2, 325க்கு வேல்முருகன் பொம்மையும் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு, 18 லட்சம் ரூபாய்க்கு கொலு பொம்மை விற்பனை நடந்தது. இந்தாண்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொம்மை வரவழைக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக வைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !