ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடி விழா துவக்கம் :ஆக.2ல் தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.2ல் நடக்கிறது. இத்திருவிழா காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி நான்கு ரதவீதிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. ஆக.,2 முடிய 10 நாள் நடக்கும் விழாவில் தினமும், அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 29ல் காலை மங்களாசாசனம் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு நடக்கும் ஐந்து கருட சேவை நிகழ்ச்சியில், அம்பாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்க மன்னார் பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன் பெரிய கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.,2ல் நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு ஏகாந்தி திருமஞ்சனம், அதை தொடர்ந்து அம்பாள்,ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் செய்துவருகின்றனர்.