அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மகா மாரியம்மன் கோவில்
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே, நானபரப்பில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம், புகளூர், நானபரப்பு உள்பட, 18 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்வாமி வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு தரப்பினர் உண்டியல் வைத்து, கோவிலை நிர்வகித்து வந்தனர். கோவில் நிர்வகிப்பது தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், மகா மாரியம்மன் கோவிலை, கரூர் அறநிலையத்துறை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. செயல் அலுவலர் ராஜாராம், ஆய்வாளர்கள் உமா, சுந்தர்ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று மாலை 3 மணி அளவில் மகாமாரியம்மன் கோவிலில் ஏற்கனவே இருந்த உண்டியலை அகற்றி விட்டு, அறநிலையத்துறை சார்பில், உண்டியல் வைத்தனர். கோவில் நடை திறப்பு, சாத்துதல் பொறுப்பை கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவில் உண்டியல், கோவில் சாவி ஆகியவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வகித்து வந்த பிரிவினர் பிரச்னையில் ஈடுபட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகள், டி.எஸ்.பி., கீதாஞ்சலி, இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு ஆகியோர் மாலை 6.30 மணி வரை பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், ஏற்கனவே கோவில் நிர்வகித்தவர்களிடம் உண்டியல் ஒப்படைப்பது என, முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.