பழநியில் நவராத்திரி விழா துவக்கம்: தினசரி கலைநிகழ்ச்சிகள்
பழநி: பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நாளை (அக்.,13ல்) காப்புகட்டுதலுடன் துவங்கி அக்.,22 வரை நடக்கிறது. நாள்தோறும் பக்திசொற்பொழிகள், நடனநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் பகல் 12 மணி உச்சிக்காலபூஜை வேளையில் மலைக்கோயில் சண்முகர், வள்ளி,தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு காப்புகட்டுதல் நடக்கிறது. இதைபோல போகர் ஜீவசமாதி சன்னதியில் காப்புகட்டப்பட்டு புவனேஸ்வரி அம்மனை புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு கொண்டுவருகின்றனர். பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.13 முதல் அக்.,22 வரை தினசரி மாலை 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைநடக்கிறது. கோதைமங்கலத்தில் அக்.,22ல் விஜயதசமி அன்று அம்பு, வில் போட்டு வன்னிகாசூரன் வதம் நடக்கிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9மணிவரை பக்திசொற்பொழிவுகள், பரதநாட்டியம், கிராமியநடனம், பக்தி இன்னிசை, வீணை இன்னிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் ராஜமாணிக்கம் செய்கிறார்.