மாமல்லபுரம் குளத்தில் படிகள் பெயர்ந்து ஆபத்து!
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கோவில் குளத்தின் படிகள், கான்கிரீட் பெயர்ந்து சரிந்து ஆபத்தாக உள்ளது.
மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் குளம், கடற்கரை சாலையில் உள்ளது. இக்குளத்தில், சுவாமிக்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப உற்சவம் நடைபெறும். குளத்தில் நீராடியே சுவாமியை வழிபட வேண்டியதும் ஐதீகம்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிவாசிகள், நீத்தார் சடங்கை, குளக்கரையில் மேற்கொள்கின்றனர். குளம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி, சீரழிந்து வருகிறது. குளத்தின் முக்கிய பகுதியில் உள்ள படிகள், நேற்று முன்தினம் திடீரென பெயர்ந்து சரிந்தன. நுழைவாயிலை ஒட்டிய குளத்து பகுதியை பக்தர்கள் பயன்படுத்துவர். கடந்த, 12ம் தேதி, மஹாளய அமாவாசை தின முன்னோர் வழிபாட்டிற்கு, ஏராளமானோர் இங்கு வந்தனர். பிற்பகலில் அனைவரும் வெளியேறி, அவ்வளாகம் வெறிச்சோடிய நிலையில், குளத்தின் நீளமான கருங்கல் படிகள், கான்கிரீட் இணைப்புகள் பெயர்ந்து சரிந்தன.
பள்ளம், இடிபாடு என, உருவாகி ஆபத்துடன் உள்ளது. படிகளுக்காக, நீளமான கருங்கற்கள் கான்கிரீட்டால் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தரமற்ற கான்கிரீட் இணைப்பு பெயர்ந்து, படிகள் பெயர்ந்து வருகின்றன. நான்குபுற படிகளும், இச்சீர்கேட்டில் உள்ள நிலையில், பக்தர்கள் கவனமின்றி இறங்கினால், நிலைதடுமாறி விழுந்து காயமடையவும், குளத்தில் தவறி விழும் ஆபத்தும் உள்ளது.
பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர், குளத்து வளாகம் செல்வதை தடுத்து, படிகளை விரைவாக சீரமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.