திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தீவிரம்!
திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வில்லியனுாரில் அமைந்துள்ள, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புடையது. பழமைவாய்ந்த இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டதால், கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய, புதுச்சேரி அரசு முடிவு செய்தது. திருப்பணிகளை கொள்வதற்காக, ரூ. 11.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2012ம் ஆண்டு டிசம்பரில் பணிகள் துவங்கியது. கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவின் முன் மண்டபம் ரூ. 29.50 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் இருந்து கற்களை பெயர்த்தெடுத்து, ரூ.55 லட்சம் செலவில், 20 ஆயிரம் சதுர அடி அளவிற்கு, புதிய கருங்கல் தரை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
தெற்கு பகுதியில் உள்ள, 99 அடி உயரம் கொண்ட ஏழு நிலை ராஜகோபுரம் ரூ.48 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படுகிறது. கோபுரத்தில் பழுதடைந்த சிலைகளை சரி செய்து வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது. கோவிலில் மூலவர் விமானம் மற்றும் முருகர், விநாயகர் சன்னதிகளின் விமானங்களில் வர்ணம் பூசப்படுகிறது. முற்றிலும் கருங்கற்களால், ரூ. 1 லட்சம் செலவில், சண்டிகேஸ்வரர் சன்னதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் செலவில், பர்மா தேக்கு மரத்தில் செய்த 36 அடி உயர புதிய கொடி மரம், திருக்காமீஸ்வரர் மூலவர் சன்னதிக்கு எதிரிலும், அம்பாள் சன்னதி எதிரில், 27 அடி உயரத்தில் மற்றொரு கொடிமரமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, வரும் ஜனவரி 20ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், திருப்பணிகள் முடுக்கி விடப்பட்டு, இரவு, பகலாக தீவிரமாக நடக்கின்றன.