தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம்!
தலைக்காவிரி: ஜீவநதியான காவிரியின் பிறப்பிடமான, தலைக்காவிரியில் இன்று நள்ளிரவு, 12:15 மணிக்கு தீர்த்த உற்சவம் நடக்கிறது. கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உட்பட வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.குடகு மாவட்டம், மடிகேரி தாலுகா தலைக்காவிரியில், ஜீவநதியான காவிரியின் பிறப்பிடம் உள்ளது. ஆண்டுதோறும் தலைக்காவிரியில் தீர்த்த உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும், குடகு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அன்று நள்ளிரவு, 12:05 மணிக்கு தனுர் லக்னத்தில், அட்சய பாத்திரம் வைக்கப்பட்டது. அதிகாலை, 3:50 மணிக்கு கும்ப லக்னத்தில், காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டன. நேற்றும் சில ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இன்று நள்ளிரவு, 12:15 மணிக்கு மிதுன லக்னத்தில், காவிரி தீர்த்த உற்சவம் நடக்கிறது. காவிரி தீர்த்த உற்சவத்தை காண, இம்முறை, 3.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தலைக்காவிரிக்கு வந்துஉள்ளனர். பக்தர்களின் அனுகூலத்துக்காக, மடிகேரியிலிருந்து சிறப்பு பேருந்துகளை கே.எஸ்.ஆர்.டி.சி., இயக்குகிறது.