400 ஆண்டு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!
திருப்பூர்: திருப்பூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள, சின்ன நெகமத்தில், 400 ஆண்டுகள் பழமையான கோவில் கல்வெட்டு மற்றும் இறந்தவர்கள் நினைவிடமான, ‘பள்ளிப்படை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சின்ன நெகமத்தில், திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வேலுசாமி, பொன்னுசாமி, சதாசிவம், திருநாவுக்கரசு, ரவிகுமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், கல்வெட்டும், பள்ளிப்படையும் கிடைத்து உள்ளன. ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது: கல்வெட்டில், ‘நிகமம்’ என ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,300 ஆண்டுகளுக்கு முன் உருவான, முதல் வணிகக் குழு பெயர் நிகமம். வணிகக் குழுவுக்கும், இப்பகுதிக்கும் தொடர்பு இருந்துள்ளது. சென்றாய பெருமாள் கோவில் கர்ப்ப கிரகத்தின் தெற்கு சுவரில், 12 அடி நீளம், 3 அடி அகலத்தில் கல்வெட்டு இருந்தது. அதை மீட்டு, படியெடுத்து படித்தபோது, 13 வரிகள் இருப்பது தெரிய வந்தது. ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற வார்த்தையுடன், வரிகள் துவங்குகின்றன.
கோவில் முன் மண்டபத்தில், கொண்டம நாயக்கர், அவரது மனைவி முத்தம்மாள், பேரன் முத்துவல்ல கொண்டம நாயக்கர், அவரது மனைவி வெள்ளையம்மாள் ஆகியோர் சிலைகள், நான்கு துாண்களில் புடைப்பு சிற்பமாக உள்ளன. கோவில் அருகில், பள்ளிப்படை என அழைக்கப்படும், இறந்த நால்வரின் நினைவிடங்களும், அவர்களின் சிலைகளும் உள்ளன. வரதராஜ பெருமாள் கோவிலில், 4 அடி நீளம்; 1.5 அடி அகலத்தில், எட்டு வரிகள் அடங்கிய எழுத்து கல்வெட்டு உள்ளது. இதிலும், வெள்ளையம்மாள் செய்த திருப்பணிகள் பற்றிய தகவல்கள் உள்ளன. இதன் வாயிலாக, சோழப் பேரரசில், செம்பியன் மாதேவியார் போல், பாளையக்காரர்கள் ஆட்சியிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்துள்ளதையும், அவர்கள் செய்த திருப்பணிகள் குறித்தும் அறிய முடிகிறது. இவ்வாறு ரவிகுமார் தெரிவித்தார்.