ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் இளமையாக்கினார் கோவில் குளம்!
சிதம்பரம்: திருநீலகண்டர் தம்பதிகளுக்கு இளமை கொடுத்த இளமையாக்கினார் கோவில் குளம் ஆகாயத் தாமரைகள் படர்ந்து மோசமான நிலையில் இருப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது இளையாக்கினார் கோவில். தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா இக்கோவிலின் மிக சிறப்பாகும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடைபெறும். பிரச்னையால் பிரிந்துள்ள தம்பதியர், தங்களுக்குள் கருத்து ஒற்றுமை இல்லாதோரும், ஒற்றுமையாக இருக்க இக்கோவிலில் வழிபாடு செய்யப்படுகிறது. நாயன்மார்களில் ஒ ருவரான திருநீலகண்டர் அவரது மனைவி இளமையாக்கினார் கோவில் குளத்தில் மூழ்கி இளமை பெற்ற வரலாறு உண்டு. அந்த அளவிற்கு புகழ் மிக்க இளமையாக்கினார் குளம் தற்போது பக்தர்கள் மனம் வெதும்பும் நிலையில் முற்றிலும் ஆகாயத்தாமரை படர்ந்து குளத்தில் உள்ள தண்ணீர் கூட தெரியாத நிலைக்கு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக் கழக வேதியியல் மாணவர்கள் குளத்தில் ஆகாயத் தாமரை வளராமல் இருப்பதற்காக ஒரு வகை மீன்களை குளத்தில் விட்டனர். அனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த மீன்களை துாண்டிப் போட்டு பிடித்து அழித்து விட்டனர்.மீன் பிடிப்பதை தடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தற்போது ஆகாயத் தாமரைகள் அதிகரித்துள்ளது. தற்போது, குளத்தில் ஆகாயத் தாமரைகள் மண்டியும், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் கலக்கிறது. எனவே, குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.