தாரகேஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சத்தில் புதிய தேர்
வேலூர்: வேலூர் தாரகேஸ்வரர் கோவிலுக்கு, 40 லட்ச ரூபாய் செலவில், புதிய தேர் செய்ய பூஜை நடந்தது. வேலூர் தோட்டப்பாளையத்தில் தாரகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடக்கும். இந்த கோவிலில் இருந்த தேர் முறையாக பராமரிக்கப்படாததால், கடந்த 20 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது. இந்து சமய அற நிலையத்துறையினர் புதியதாக தேர் செய்யவோ, அல்லது தேரை சீர் செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தோட்டப்பாளையம் பொது மக்கள், தாரகேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி ஆதித்தன் தலைமையிலான குழுவினர், பொதுமக்கள் பங்களிப்புடன், 40 லட்ச ரூபாய் செலவில் புதிய தேரை செய்ய உள்ளனர். இதற்கான பூஜை நேற்று நடந்தது. இதில் தோட்டப்பாளையம் பொது மக்கள், ஸ்தபதி ஆதித்தன் கலந்து கொண்டனர். தாரகேஸ்வரர் கோவில் பழைய தேரில் நல்ல நிலையில் உள்ள சிற்பங்களை புதிய தேரில் பயன்படுத்த உள்ளனர். 11 அடி உயரம் கொண்ட பீடத்துடன் செய்யப்படும் தேரின் மொத்த உயரம், 20 அடியாக இருக்கும். வரும் சித்திரை மாதத்திற்குள் புதிய தேர் செய்து, பிரம்மோற்சவ நாளில் வெள்ளோட்டம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.