உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூரில் தங்கக்காசுகள் அச்சடிப்பு: வரலாற்று கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேவூரில் தங்கக்காசுகள் அச்சடிப்பு: வரலாற்று கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள சேவூரில், தங்கக்காசுகள் அச்சடிக்கப்பட்ட தகவல், அனுமந்தராயர் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூரில், கோட்டை அனுமந்தராயர் கோவில் உள்ளது. இங்கு, கி.பி., 1235ல், தங்கக்காசுகள் அச்சடித்த வரலாற்றை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளன. ஆய்வு மேற்கொண்ட, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை சுந்தரம், ஆர்வலர் ஜெயசங்கர் கூறியதாவது: சேவூரில், கி.பி., 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, அக்கசாலீச்சுர முடையார் கோவில் உள்ளது. தற்போது, கோட்டை அனுமந்தராயர் கோவில் என அழைக்கப்படுகிறது. இங்கு, கி.பி., 1235 முதல் 1277ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகள் உள்ளன. தங்கக்காசுகள் தயாரிக்கும் இடம், அக்கசாலை என்று வழங்கப்பட்டது; தங்க நாணயங்கள் சேவூரில் அச்சடிக்கப்பட்டது என்பதற்கு இக்கோவிலே சான்று. மொத்தம், ஏழு கல்வெட்டுகள் உள்ளன. அக்கசாலை கோவில் அமைந்துள்ள இடம், கோட்டை என்று அழைக்கப்படுவதால், சேவூரில் கோட்டை இருந்தது தெளிவாகிறது. கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியில் உள்ள கஜஹகட்டி கணவாய் வழியாக, கொங்கு நாட்டுக்கு வரும் வணிகப் பாதையில் சேவூர் இருந்துள்ளது. இவ்வாறு, சுந்தரம், ஜெயசங்கர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !