மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா கோலாகலம்!
மதுரை: மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில், ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா அக்டோபர் 27ம் தேதி துவங்குகிறது. ஒவ்வொரு வருடமும் தாமோதர தீபத்திருவிழா என்ற விழாவை இஸ்கான் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இவ்விழாவின் சிறப்பம்சம் என்னவெனில், பக்தர்களே நேரடியாக சுவாமிக்கு தீப ஆரத்தி காட்டலாம் என்பதே ஆகும். மதுரையில் இவ்விழா, மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் செவ்வாய் கிழமை அக்டோபர் 27ம் தேதி முதல் துவங்குகிறது. தினமும் மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இவ்விழா நவம்பர் 25ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும். இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் தாங்களே நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டலாம்.
தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டு இந்தத் தமோதர தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்த இடமும் , கிருஷ்ணர் வளர்ந்த இடமுமான டெல்லிக்கு அருகில் உள்ள கோகுலத்தில் இவ்விழா ஒரு மாத காலம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களிலும், கோகுலத்தில் கொண்டாப்படுவதைப் போல ஒரு மாத கால காலம் இவ்விழாஅனுசரிக்கப்படுகிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிய நாகத்தின் மீது நடனமாடியது, நரகாசுரனை வதம் செய்தது, கோவர்த்தன கிரிமலையை சுண்டு விரலால் தூக்கி குடையாகப் பிடித்தது உள்ளிட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பெரும்பாலான தெய்வீக லீலைகள் இம்மாதத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தீப ஆரத்தியின் போது கோகுலத்தில் பாடப்பெறும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ சாகசங்கள் நிறைந்த புகழ் பெற்ற பாடலான தாமோதரஷ்டகம் என்ற பாடல் பாடப்பெறும். இப் பாடல் கேட்போரின் மனதிற்கு மிகவும் இனியதாக அமையும். அதுமட்டுல்லாது, தாமோதரரான ஸ்ரீகிருஷ்ணரை இப்பாடல் மிகவும் கவரக் கூடியது. வேத சாஸ்திரங்கள், யார் ஒருவர் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் கூட நீங்கி விடுகின்றன என்று குறிப்பிடுகிறது. விழாவின் விசேஷ திருநாட்களான அக்டோபர் 27, நவ. 1, 8, 10, 15, 22, 25 தேதிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். எனவே மக்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த தாமோதர தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகிறது.
தொடர்புக்கு: இஸ்கான் - ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை. 0452-2346472
தாமோதர மாதத்தின் சிறப்பும், தீபஆரத்தியின் பலனும்: இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் கடைசியானதும், சிறந்த மகிமைகள் பொருந்திய மாதம் தாமோதர மாதம் ஆகும். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையையை போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பது அவசியமானதாகும். இவ்வருடம் இந்த தாமோதர மாதம் அக்டோபர் 27ம் தேதி துவங்கி நவம்பர் 25ம் தேதி முடிவுறுகிறது.
தாமோதர மாதம் என்பதன் பொருள்?
தாமோதரர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரை குறிக்கும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், கிருஷ்ணனின் தூய பக்தையுமான ஸ்ரீமதி ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்ம புராணம் இம்மாதம் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறிதளவு பக்திசேவை செய்தால் கூட கிருஷ்ணர் தன் திவ்ய ஸ்தலத்தையே அப்பக்தனுக்கு வழங்குவார் என்று கூறுகிறது. அதே போல், புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதிபுண்ணிய மாதம் தாமோதர மாதம் என்று ஸ்கந்த புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.
விழாக்கள் நிரம்பிய மாதம்: தீபாவளி, தாமோதர லீலை, ஸ்ரீமதி லெக்ஷ்மி பூஜை, பகுலாஷ்டமி-ஸ்ரீராதா குண்டம் உருவான நாள். துளசி-சாளக்கிராம திருக்கல்யாணம், கோவர்த்தன கிரி பூஜை-மற்றும் பல முக்கியமான விழாக்கள் இந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாமோதர விரதம் கடைபிடிக்கும் முறை: (1) ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபமும் (2) கிருஷ்ணருக்கு நெய் தீபம் காட்டுவதும், (3) உணவுக்கட்டுப்பாடும் தாமோதர மாத விரதத்தின் முக்கிய மூன்று சிறப்பம்சங்களாகும்.
மஹாமந்திர ஜபம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே: ஹரே ராம ஹரே ராம: ராம ராம ஹரே ஹரே எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய இந்த மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 தடவையும், அதிகபட்சம் எவ்வளவு முறை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரிக்கலாம். ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய சீடரான ஸ்ரீலஜீவ கோஸ்வாமி அவர்கள் விரதங்கள் பின்பற்றுவதில் மிக முக்கியமானது ஹரி நாமத்தை உச்சரிப்பதே ஆகும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம், விரதத்தை கடைபிடிப்பதற்கான மனநிலை உட்பட அனைத்து நலன்களையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தீப ஆரத்தி வழிபாடு: பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரியமான தாமோதர மாதத்தில் தீப ஆரத்தி காட்டுவதால் பலவிதமான நற்பலன்களை பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதோ அவற்றில் சில. ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்தில் பகவானுக்கு தீப ஆரத்தி காட்டினால் நிலைத்த செல்வத்தையும், நல்ல குழந்தைகளையும், புகழையும், வெற்றியையும் பெற முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தினசரி நெய் விளக்கு காட்டுவதால் பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் முழுவதும் அழிகின்றன. இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுடன்ஒன்று தேய்த்தால் நெருப்பு உண்டாவது எப்படி நிச்சயமோ, அதே போல் தாமோதர மாதத்தில் பகவானுக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதால் நிச்சயம் அதன் நற்பலனை சந்தேகத்திற்கு இடமின்றி பெறலாம். எல்லா புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும், யாகங்கள் செய்த பலனையும் பெறுவதுடன், முன்னோர்களையும் நற்கதியடைய செய்யலாம். - பத்ம புராணம், ஸ்கந்த புராணம்.
உணவு முறை: அசைவ வகைகள் பொதுவாகவே தவிர்க்க வேண்டும். இது தவிர இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஏகாதசி நாட்களில் வழக்கம் போல் தானிய உணவு சேர்க்க கூடாது.
மக்கள் நலன் கருதி நிகழ்ச்சி ஏற்பாடு: மதுரை மக்கள் நலன் கருதி தாமோதர மாதம் முழுவதும் இந்த தாமோதர தீபத் திருவிழா, மணிநகரத்திலுள்ள இஸ்கான்-ஹரே கிருஷ்ணா கோயிலில் அனைவரும் பங்கேற்கும் வகையில் தினசரி மாலை 6.30 மணிக்கு தீபம் காட்டும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மன அமைதியும் மகிழ்ச்சியும் பெறலாம். மேலும் விழாவை முன்னிட்டு கோயில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.