ராசிபுரம் மாரியம்மன் குண்டம் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ராசிபுரம்: ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், ஐப்பசி மாத தேர்த்திருவிழா மற்றும் குண்டம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழா கடந்த, அக்டோபர், 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 21ம் தேதி முதல் பல்வேறு சமூகத்தினரின் சார்பில், மண்டப கட்டளை நிகழ்ச்சிகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, இரவு வாணவேடிக்கை, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. 22ம் தேதி கம்பம் நடுதல், நவம்பர், 2ம் தேதி பூவோடு பற்ற வைத்தல், 3ம் தேதி பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி, கொடியேற்று விழா நடந்தது. 4ம் தேதி காலை அம்மை அழைத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு அக்னி குண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று, அதிகாலை முதல் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். இதில், அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மாலை, 4 மணிக்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதையடுத்து நவம்பர், 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடையாத்திக்கட்டளை நிகழ்ச்சி நடக்கிறது.