பழநி ரோப்காரில் புதிய அயன் ரோப்தீபாவளிக்கு இயக்க திட்டம்!
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் ராஞ்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட புதிய அயன்ரோப்(கம்பிவடக்கயிறு) பொருத்தப்பட்டு தீபாவளிக்கு இயக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. அக்.,31 முதல் புதிய கம்பிவடக் கயிறு, பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ராஞ்சியில் இருந்து ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள, 730 மீட்டர் நீளமுள்ள கம்பிவடக்கயிறு வரவழைக்கப்பட்டுள்ளது. அதனை கீழ்தளம், மேல்தள மோட்டார், பல்சக்கரங்கள், டவர்களில் பொருத்தும் பணி நடக்கிறது. பெட்டிகள், உருளைகள், பல்சக்கரங்களில் ஆயில், கிரீஸ் இட்டு தீபாவளி அல்லது கந்தசஷ்டி விழாவிற்குள் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ புதிய கம்பி வடக்கயிறு பொருத்தும் பணி ரோப்கார் பாதுகாப்பு குழு ஆலோசனைப்படி, கொல்கத்தா நிறுவன பணியாளர்கள் மூலம் நடக்கிறது. மழை பெய்யாமல் இருந்தால் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து நவ.,9ல் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு தீபாவளிக்கு ரோப்காரை இயக்க திட்டமிட்டு உள்ளோம் ,” என்றார்.