சபரிமலை மண்டல, மகர உற்சவத்தில் 13 லட்சம் பேருக்கு அன்னதானம்!
மதுரை: சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு உற்சவ நாட்களில், பக்தர்களுக்கான சேவையை, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் விரிவாக செய்துள்ளது. 13 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கவுள்ளனர்.மாநில தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் 3000 பேர் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடுவர். மலை ஏற்றத்தின்போது பக்தர்களுக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், மாரடைப்பு ஏற்பட்டால், உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் மருத்துவ முகாம்கள் எரிமேலி, அழுதா, கரிமேடு, பெரியாவட்டம், பம்பா, நிலக்கல், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் எமர்ஜென்சி பிரிவு தொண்டர்கள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். பக்தர் வசதிக்காக மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு 13 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கடந்தாண்டு மரணமடைந்த பக்தர் காசிக்கு ஒரு லட்சம் ரூபாய் சேவா சங்கம் வழங்கியது. சேவா சங்க சேவையை பாராட்டி திருவிதாங்கூர் தேவசம்போர்டு கமிஷனர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். எரிமேலி, பம்பா உள்ளிட்ட பகுதியில் சேவா தொண்டர்களுடன் இணைந்து தேவசம்போர்டு துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியை மேற்கொள்வர், என்றனர்.