திருப்புவனத்தில் சினிமா விநாயகர்!
திருப்புவனம்: திருப்புவனத்தில் விளைச்சல் பெருகவும், விவசாயம் செழிக்கவும் மக்களால் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் பெயர் மாறி சினிமா விநாயகர் என அழைக்கப்படுகிறார். திருப்புவனம் நாடார் தெருவை அடுத்து ரயில்வே டிராக்கை தாண்டி 5 அடி உயரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலை உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, தென்னை, வெற்றிலை என பல்வேறு விவசாயம் நடக்கிறது. விளைந்த நெல்லை உலர்த்தும் களம் அருகே பொதுமக்களால் 60 ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமான விநாயகர் சிலை அமைக்கப் பட்டது.
விளை நிலங்களில் பணி மேற்கொள்ளும் போது விநாயகருக்கு படைத்து அதன் பின் பணிகளை மேற்கொள்வது வழக்கம். முதன் முதலாக மதுரையில் இருந்து மானாமதுரைக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்ட போது பணி தடங்கல் இன்றி நடைபெற ரயில்வே ஊழியர்களும் வணங்கி வந்தனர். மற்ற பகுதிகளை காட்டிலும் திருப்புவனத்தில் மீட்டர்கேஜ் பாதை ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது வித்தியாசமானது.
இங்கு சிறைச்சாலை, அம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு சினிமா படப் பிடிப்பு நடந்துள்ளது. அப்போது இந்த விநாயகர் சிலை முன்பும் படப்பிடிப்பு நடந்தது. நாளடைவில் இது எல்லா சினிமாக்களிலும் இடம் பெற்றதால், சினிமா பிள்ளையார் என அழைக்க ஆரம்பித்து விட்டனர். விவசாயம் இல்லாத நிலையில் சினிமா ஷூட்டிங் அதிகளவு நடந்ததால் விநாயகரும் பளிச்சென்று மின்னி வருகிறார். சிறைச்சாலை படத்தில் தான் இந்த விநாயகர் அதிக முறை வருவார்.