திருத்தணி தெப்பத் திருவிழா நிறைவு: மழையில் பக்தர்கள் தரிசனம்
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 3ம் நாள் தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் முருகனை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, 23ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவில், மாலை 6.30 மணிக்கு மலைக் கோவிலிலிருந்து சரவண பொய்கையில் உள்ள தெப்பத்திற்கு எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. உற்சவ பெருமான் தெப்பத்தில் ஏழு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்தில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோரின் பக்தி இன்னிசை நடந்தது.இதில் எம். எல்.ஏ., அருண் சுப்பிரமணியன், முன்னாள் எம். எல்.ஏ., அரி, கோவில் இணை ஆணையர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை கொட்டிய மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர்.