திருவண்ணாமலையில் துர்க்கையம்மன் உற்சவத்துடன் தீப திருவிழா துவக்கம்!
ADDED :3660 days ago
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, இன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், வரும், 16ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. அதை தொடர்ந்து வரும், 22ம் தேதி தேரோட்டமும், 25ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலினுள் பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழா எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெறும் வகையில், நகர காவல் எல்லை தெய்வமான துர்க்கையம்மனுக்கு, இன்று உற்சவம் நடக்கிறது. இன்றிரவு காமதேனு வாகனத்தில், துர்க்கையம்மன் மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு உற்சவமும், 15ம் தேதி விநாயகர் உற்சவமும் நடக்கிறது.