உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோவில் கல்வெட்டு கூறுவது என்ன?

திருச்செந்தூர் கோவில் கல்வெட்டு கூறுவது என்ன?

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில், வள்ளி குகையில் திருமலைநாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் வள்ளிகுகை உள்ளது. இது சந்தான மலை எனப்படுகிறது. இதை ஆதிசங்கரர், கந்த மாதன பர்வதம் எனக்குறிப்பிடுகிறார். இதற்கு செல்லும் வழியில் பலகையால் ஆன, 4.5 அடி உயரம், 1.5 அகலம் கொண்ட கல்வெட்டு உள்ளது. மிகப்பழமையான இக்கல்வெட்டில் பழங்கால தமிழில், 34 வரிகள் எழுதப்பட்டிருந்தன. எண்ணெய்மக்கு படிந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டினை, திருச்செந்தூர் செந்திலாண்டவர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தவசிமுத்து, சமீபத்தில் ஆய்வு செய்தார். கல்வெட்டு ஆராய்ச்சியாளரான அவர் கூறியதாவது: கி.பி., 1656ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்தார். அப்போது, அவரது உத்தரவுப்படி திருச்செந்தூரைச் சேர்ந்த, முத்தையா ஜோதிடர் இந்த வள்ளிகுகை முன்மண்டபம், வெளிப்புற கிணறு அமைத்து பக்தர்கள் தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இக்கல்வெட்டு வைகாசி 4ம் தேதி பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி., 1648ல் டக்சுக்காரர்கள் திருச்செந்தூரில் நகை, பொருட்களை கொள்ளையடித்த போது சிற்பங்கள், குடைவரை ஓவியங்களையும் சிதைத்துச் சென்றனர். பின்னர் ஆட்சிக்கு வந்த மன்னர் திருமலை நாயக்கர் , இங்கு எஞ்சியிருந்த இந்த கல்வெட்டு உள்ளிட்ட வரலாற்று சுவடுகளை புதுப்பித்துள்ளார். முருகனை மணம் முடிப்பதற்காக வள்ளி, சிவபெருமானை லிங்க வடிவில் வணங்கியது, இதன் ஸ்தல வரலாறு. மேற்கண்ட விவரங்கள் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !