உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேக பூஜை துவக்கம்!

ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேக பூஜை துவக்கம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இரண்டாம் கட்ட சம்ப்ரோஷண விழாவுக்கான யாகசாலை பூஜை, இன்று மாலை துவங்குகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ தலங்களில் முதன்மையானது. 12 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, 14.5 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, கடந்த செப்டம்பர், 9 ம் தேதியன்று, கோவிலிலுள்ள, 11 கோபுரங்கள், 43 சன்னதிகளுக்கு முதற்கட்ட கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம், வெள்ளை கோபுரம், மூலஸ்தான தங்கக் கோபுரம், தாயார் சன்னதி கோபுரம், ஆரியபட்டாள் கோபுரம் உள்ளிட்ட, பத்து கோபுரங்கள், மூலவர், தாயார் சன்னதி உள்ளிட்ட ஐந்து சன்னதிகளுக்கு, 18 ம் தேதி இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள், இன்று மாலை, 6 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து நாளை, 15ம் தேதி காலை, 9.30 மணிக்கு இரண்டாம் காலம் யாகமும், மாலை, 6.30 மணிக்கு மூன்றாம் காலம் யாகமும் நடக்கிறது.

நவம்பர், 16ம் தேதி காலை, 9.30 மணிக்கு நான்காம் காலம் யாகமும், மாலை, 4.30 மணிக்கு பெரிய சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னதி ஸ்பான திருமஞ்சனம் நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு ஐந்தாம் காலம் யாகம் துவங்குகிறது. நவம்பர், 17 ம் தேதி காலை, 8.30 மணிக்கு, ஆறாம் காலம் யாகமும், மாலை, 5 மணிக்கு ஸ்ரீரங்க நாச்சியார் சன்னதி ஸ்நபன திருமஞ்சனமும், இரவு, 7.15 மணிக்கு, ஏழாம் காலம் யாகமும் துவங்குகிறது. நவம்பர், 18 ம் தேதி அதிகாலை, 4 மணி முதல், 7 மணி வரை, விஸ்வரூம் (சதுஸ்த்தானார்ச்சனை), காலை, 7.30 மணிக்கு கும்போத்தாபனம் (கடகம் புறப்படுத்தல்) நடைபெறும். காலை, 8.45 மணிக்கு மேல், 10 மணிக்குள் பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி, தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்கள் சம்ப்ரோஷனம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, காலை, 10.30 மணிக்கு மக்கள ஹாரத்தி சாற்று முறை நடக்கிறது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்த தங்கக் கோபுரம், மூலவர் சன்னதி, கோவில் தூய்மை பணி நிறைவடைந்து உள்ளன. கோவிலில் தாயார் சன்னதியின் முன்புறமும், ஆயிரம் கால் மண்டபம் ஆகிய இரண்டு இடங்களில் யாகசாலை அமைத்து உள்ளனர். விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்கள், சன்னதிகள், மதில் சுவர்கள் முழுவதுமாக, 30 லட்சம் ரூபாயில் மின் விளக்குகளால் அலங்கரித்து உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக ஆயிரம் கால் மண்டபம் மணல் வெளி, ராஜகோபுரம் அருகில் உள்ள காலியிடம் ஆகிய இடங்களில் பிரமாண்ட கூடாரம் அமைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !