தீராத வியாதிகளைத் தீர்க்கும் சாணியடி திருவிழா!
தாளவாடி: தாளவாடி பகுதியில் தீராத வியாதிகளைத் தீர்க்கும், சாணியடித் திருவிழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சாணியை, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி ஒன்றியம், கும்டாபுரம் கிராமத்தில், 200 ஆண்டு பழமையான பீரேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தீபாவளி முடிந்த மூ ன்றாவது நாள், நடக்கும் சாணியடித் திருவிழா வெகு பிரசித்தமானது. இதன்படி நேற்று விழா நடந்தது.
முன்னதாக விழாவை ஒட்டி, இளைஞர்கள் இருவரை கழுதை மீது அமர வைத்து, கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து, கோயில் அருகே வீதியில் தயாராக குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை, நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கையில் எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டாடினர். இரண்டு மணி நேரம் நடந்த விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கண்டு களித்தனர். விழா குறித்து கும்டாபுரம் கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 200 ஆண்டுகளுக்கு முன், ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். இறந்த பிறகு அவர் உடலை, மாட்டுச்சாணக் குவிய லில் புதைத்து விட்டனர். அந்தக் குவியலை, விவசாயத்துக்காக, ஒரு வண்டியில் தோண்டி போட்ட போது, சாணத்திலிருந்து ரத்தம் கசிந்தது. சாணத்தை களைந்து தேடியபோது, அதில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதை எடுத்து கோயில் அமைத்தோம். அப்போது சாமியாடிய ஒருவர், ‘என்னை (சிவலிங்கத்தை) சாணி குவியலில் இருந்து எடுத்ததால், ஒருவருக்கு, ஒருவர் சாணியை எடுத்து உடலில் அடித்து வழிபட வேண்டும்’ என்றார். அதன்படி, இந்த விழாவை பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம். இப்படிச் செய்வதால், தீராத வியாதிகள், உடலில் உள்ள புண்கள் குணமாகிறது, கிராமத்தில் விவசாயம் செழிப்பாகிறது. இவ்வாறு கூறினர். திருவிழாவை ஒட்டி, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே சாணம் ÷ சகரிக்கின்றனர். திருவிழா முடிந்ததும் சாணம் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்கும் விவசாயிகள், விளை நிலங்களுக்கு எருவாக பய ன்படுத்துகின்றனர்.