தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: இன்று கொடியேற்றம்!
ADDED :3611 days ago
வேலுார்: தி.மலை அண்ணாமலையார்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா, இன்றுகாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, 10 நாட்கள் கோலாகலமாக நடப்பது வழக்கம். இன்று காலை, 6:15 மணிக்கும் மேல், 7:25 மணிக்குள், சுவாமி சன்னிதி முன் உள்ள, 61 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது.முதல் நாளான இன்று, காலை பஞ்ச மூர்த்திகள் கண்ணாடி வாகனத்திலும், இரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்திலும் பவனி வருவார்கள்.வரும், 25ம் தேதி விழாவின், 10வது நாள் மகா தீபத்திருவிழா நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு, கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.