திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது!
உடுமலை: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால், பஞ்சலிங்க அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; பாலாற்றில் கரைபுரண்டு ஓடிய நீர், அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. இதையடுத்து, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு, உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். இங்கு திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை உள்ளன; கோவிலை ஒட்டியுள்ள, மலைப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
பஞ்சலிங்க அருவிக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொண்டையாறு, கிழவன் ஆறு, வள்ளி ஆறு, தோணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. அருவில் இருந்து விழும் நீர், அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டி ஓடும் பாலாற்றின் வழியாக, திருமூர்த்தி அணைக்குச்செல்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிப்பகுதியில், கனமழை பெய்து வருகிறது. இதனால், காட்டாறுகளில் இருந்து பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று அதிகாலை அருவியில் கொட்டிய நீர், பாலாற்றில் கரைபுரண்டு ஓடி, அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. கோவிலை சுற்றியுள்ள கன்னிமார் கோவில் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் நீரால் சூழப்பட்டது. மேலும், கோவிலை சூழ்ந்தநீர், அமணலிங்கேஸ்வரர் சன்னதிக்குள் புகுந்தது. இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா வந்தோர், கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழும் அளவுக்கு, பாலாற்றில் நீர் வந்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதித்தனர். மேலும், அருவி அமைந்துள்ள பகுதி மற்றும் வழித்தடத்தில், அறநிலையத்துறை, வனத்துறை ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.