பழநியில் வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்தசஷ்டி விரதம் முடித்த பக்தர்கள்!
பழநி: பழநியில் வாழைத்தண்டு, பழங்கள்கூட்டு நைவேத்யத்துடன் கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் முடித்தனர். கந்தசஷ்டி விழாவிற்காக நவ.,12 முதல் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள், பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் விரதத்தை நிறைவு செய்வதற்காக குழுக்களாக அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து, நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கருவறையில் மூலவர் ஞானதண்டாயுத சுவாமி, குழந்தைவேலாயுதசுவாமிக்கு நைவேத்யம் செய்தபின், வாழைத்தண்டுடன், தயிர் கலந்த பிரசாதத்தை பக்தர்கள் வழங்கினர். பழநி ரெங்கநாயகி கூறுகையில், பல ஆண்டுகளாக கந்த சஷ்டிவிரதத்தை மேற்கொண்டு வருகிறோம். ஒருவாரம் முழுவதும் கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் படித்து சூரசம்ஹாரத்தன்று வாழைத்தண்டு நைவேத்யம் தயார் செய்து விரதத்தை நிறைவு செய்துவது வழக்கமாகும். அதன்படி வாழைத்தண்டுடன் ஆப்பிள், மாதுளை, திராட்சை, கேரட் உள்பட பழம், தயிர், காய்கறிகளில் படையல் தயாரித்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து சஷ்டி விரதத்தை முடிக்கின்றனர்.