ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம், பெருவயல் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நவ., 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சுவாமிகளுக்கு தினமும் காலை, மாலை அபிஷேகம், சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, வீதியுலா நடந்தன. ஆன்மிக சொற்பொழிவு. பாராயணம் நடந்தது. இக்கோயில்களில் நேற்று மாலை சுவாமி புறப்பாடு, இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சூரனை முருகன் வதம் செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில்களில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கந்த சஷ்டி குழுவினர் செய்தனர்.
*பரமக்குடியில் முருகன் கோயில் களில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று சூரனைவதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. மாலை 5 மணிக்கு சக்தியிடம் வாங்கிய வேலுடன், முருகன் மயில் வாகனத்தில் வலம்வந்து சூரனை வதம் செய்தார். இதுபோன்று பாரதிநகர் செல்வகுமரன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் "அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.இன்று காலை சுப்பிரமணி சுவாமி கோயிலிலும், மாலை செல்வகுமரன் கோயிலிலும் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.