இந்து கோவில்களை கட்டுப்படுத்தும் சட்ட திருத்தம் ரத்து
பெங்களூரு: இந்து கோவில்களை, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, கர்நாடக அரசு செய்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அரசின் முடிவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புஅறநிலைய துறை சட்டத்தின் கீழ், மொத்தம், 34 ஆயிரம் கோவில்களை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 2003ல், மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, கனகபுராவின் தேவளகானபுரா நரசிம்ம சரஸ்வதி மடம், கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளையில், வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் உத்தரவை ரத்து செய்தனர். தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கும் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்போது இந்த விவாதம் உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ளது.உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவுக்கு வரும் முன்னரே, 2011ல், சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் அரசு கொண்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, இந்து மதம் மற்றும் அறநிலையத்துறை சட்டத்தில், அரசு மேலும் சில திருத்தங்களை கொண்டு வந்தது.இதை எதிர்த்து, உத்தர கன்னட மாவட்டம், சிர்சியின் மகாகணபதி சங்கர கோவில் உட்பட, 68 கோவில் நிர்வாகத்தினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பின்னடைவுமனுவில், கோவில்களை அறநிலையத்துறை எல்லைக்குள் சேர்ப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு வாய்ப்பில்லை. எனவே அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்யும்படி, குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை நேற்று முன்தினம் நீதிபதிகள் ஆனந்த பைரரெட்டி, சுஜாதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அறநிலையத்துறை சட்டத்தில், சட்டத்திருத்தம் கொண்டு வந்தது, சட்டத்துக்கு புறம்பானது. சமத்துவ விதிகளுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசின் சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்ற தீர்ப்பால், கோவில்களை வசப்படுத்திக் கொண்டு, நிர்வாக அதிகாரியை நியமித்து, கோவில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற, அரசின் நோக்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அறநிலையத்துறை கமிஷனர் ஜன்னு கூறுகையில், அரசுடன் விவாதித்து, அடுத்தகட்ட முடிவை எடுப்போம், என்றார்.