மருதமலையில் மொய்ப்பணம் சமர்ப்பித்து சுவாமி தரிசனம்
கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடந்த திருக்கல்யாண உற்சவ வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாவது படை வீடாக, பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,13ம் தேதி, காப்புக்கட்டும் உற்சவத்தோடு துவங்கியது. நேற்று முன் தினம், சூரசம்ஹார விழா நடந்தது. சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. நேற்று காலை கோவிலில் வழக்கமான யாகசாலை பூஜைகள், சிவாச்சாரியார்கள் புடைசூழ நடந்தது. சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, கோவிலில் வீதி உலா வந்தார். யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின்பு, முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமியை, வள்ளி, தெய்வானை சமேதரராக வழிபட்டனர்.வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். அதன் பின் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களில் பலர், மொய்ப்பணம் சமர்ப்பித்து சுவாமியை தரிசித்தனர்.