அவிநாசி பெருமாள் கோவிலில் திருப்பணி துவங்கியது!
அவிநாசி: பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமாள் கோவிலில், திருப்பணி துவங்கியுள்ளது; பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருவலூர் அருகே ராமநாதபுரத்தில், ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. கருவலூர் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. முற்றிலும் கற்கோவிலாக உள்ள இங்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 300 ஆண்டுகளுக்கு மேலாகிறது. யாரும் கண்டுகொள்ளாததால், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியது; சுவாமி சிலைகள் திருடுபோயின; சில சிலைகள், சேதப்படுத்தப்பட்டன. இதையறிந்த பக்தர்கள், மனவேதனை அடைந்து, கோவிலில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருப்பணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக, 13வது நிதிக்குழு வாயிலாக, 36 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கருவறை, அர்த்த மண்டபம் இடிக்கப்படுகிறது.
மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகை யில், ""மிகவும் சிதிலமடைந்துள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில், திருப்பணி துவங்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த மண்டபம் கட்டுவதற்கு, அறநிலையத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. பிற திருப்பணிகளை, நன்கொடை பெற்று செய்ய உள்ளோம். பழமை மாறாமல், முதல்கட்ட திருப்பணியை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த திருப் பணியை, இரண்டாம் கட்டமாக நடத்தி, கும்பாபிஷேகம் செய்விக்கப்படும். நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், மாரியம்மன் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார். அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், "கோவில் கற்சுவர்களில் உள்ள சின்னங்கள், புராதனமானவை. கல்வெட்டு அல்லது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு செய்தால் மட்டுமே, கோவில் பற்றிய செய்திகள் வெளிச்சத்துக்கு வரும் என்றனர்.