உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீர் வருமா... காத்திருக்கும் அழகர்கோவில் தெப்பம்!

தண்ணீர் வருமா... காத்திருக்கும் அழகர்கோவில் தெப்பம்!

அழகர்கோவில்: மலைப்பகுதியில் மழை பெய்தும் நிரம்பாத அழகர்கோவில் தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோயில் நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில், மாசி பவுர்ணமி தெப்பத்திருவிழா சிறப்பானது. இதற்கான தெப்பம் பொய் கைகரைப்பட்டியில் உள்ளது. மலை பகுதிகளில் பெய்யும் மழைநீர், தெப்பத்திற்கு வரும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரத்து  கால்வாயை அப்பகுதியினர் ஆக்கிரமித்ததால் தெப்பத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து 2008ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.  உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.  பின், தொடர் நடவடிக்கை  இல்லாததால் மீண்டும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி தண்ணீர் வருவது தடைப்பட்டது. சில ஆண்டுகளாக வறண்ட தெப்பத்தையே பெருமாள்  சுற்றி வருகிறார். தற்போது அழகர்கோவில் மலை மற்றும் தெப்பத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தும் தெப்பத்திற்கு தண்ணீர் வரவில்லை.  எனவே கோயில் நிர்வாகம், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாதபட்சத்தில்  தண்ணீர் இல்லாத குளத்தையே பெருமாள் சுற்றி வரவேண்டிய பரிதாப நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !