வெண்ணியம்மன் கோவிலில் வரும் 29ம் தேதி கும்பாபிஷேக விழா!
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ரெட்டணையிலுள்ள வெண்ணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கின்றது. திண்டிவனம் தாலுகா, ரெட்டணை கிராமத்தில், அன்னை ஸ்ரீ வெண்ணியம்மன் கோவில், 7ம் நுõற்றாண்டில் அமைக்கப்பட்டது. இந்த அம்மன் வடக்கே இமய மலையில் உள்ள வைஷ்ணவி தேவியின் ரூபமாக உள்ளார். கருவறையில் அன்னையின் ஏழு உருவங்களும் ஒன்றாகவும் (பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, ஸ்ரீவெண்ணியம்மன், வராஹி, இந்திராணி, சாமூண்டி) மற்றும் சிவபெருமானின் குரு உருவமான தட்சிணாமூர்த்தி பெருமானை மேல்பக்கத்திலும், கீழ்பக்கத்தில் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமானும் நடுநாயகியாக வைஷ்ண மூர்த்தியின் உருவமான வெண்ணியம்மன் அமையப் பெற்றுள்ளது. நடுநாட்டின்கண் வடபால் விநாயகரின், திருத்தலமாக தீவனுõரையும், தென்கிழக்கில் பிரணவப் பொருள் உரைத்த முருகப் பெருமானின் திருத்தலமான மயிலம் ஷேத்திரத்தை உடையதாயும், மேல் திசையில் சங்கராபரணியையும், கீழ்திசையில் தொண்டி ஆற்றினையும், காசி ராமேஸ்வரம் பாட்டையில் உள்ள ரெட்டணை கிராமத்தில் வெண்ணியம்மன் கிராம தேவதையாக வீற்றுள்ளார். வெண்ணியம்மனுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சகோதரியாகிய குளுந்தி அம்மனை சங்கராபரணி ஆற்றிலிருந்து அழைத்து வந்து, ஐதீகமாக கோவிலில் விட்டுவிட்டு, வெண்ணியம்மன் வீதியுலா வருவாள். ஏற்கனவே சிறிய கல்மண்டபத்தில் அருள்பாலித்து வந்த நிலையில், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவிலின் பழுதுகள் நீக்கி, புதிய சிற்ப பஞ்சவர்ண வேலைப்பாடுடன் புதுப்பிக்கப்பட்டு, வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:30 மணி முதல் 9.00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணக்கவுண்டர் மற்றும் நிர்வாகிகள் செ#து வருகின்றனர்.