பம்பையில் ரூ.35 லட்சம் செலவில் அவசர கால உதவி மையம்
சபரிமலை: பம்பையில் 35 லட்சம் ரூபாய் செலவில் அவரகால உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இதனை கேரள வருவாய்துறை அமைச்சர் அடூர் பிரகாஷ் திறந்து வைத்தார். அண்மையில் பெய்த பெருமழையில் பம்பை திருவேணியில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் மூழ்கியது. இதில் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். விலை உயர்ந்த கார்களை மீட்பு வாகனம் மூலம் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து பம்பையில் அவசர கால உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் கூறியதாவது:
சபரிமலை, பம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் கட்டுப்பாடு அவசர கால உதவி மையத்தில் இருக்கும். இதன் மூலம் நானும், பத்தணந்திட்டை கலெக்டரும் அவர்கள் இருக்கும் இடத்தில் சபரிமலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஏதாவது அவசரம் ஏற்பட்டால் அரசிடம் இருந்து எல்லா உதவிகளும் உடனடியாக கிடைக்க இது வழிவகை செய்யும். இதற்காக நான்கு ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு ஒரு அதிகாரி இங்கு பணியில் இருப்பார். பிளாஸ்டிக்கின் தீமைகளை நமது எதிர்கால தலைமுறைதான் அனுபவிக்க வேண்டி வரும். அதனால் சபரிமலை வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மிஷன் கிரின் சபரிமலை திட்டம் பிளாஸ்டிக் இல்லாத சபரிமலையை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.