காரிமங்கலம் மலைக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் நடந்த கார்த்திகை தீபத் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலம் மலைக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. இதையொட்டி, ஸ்ரீ அபித குஜாலம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, நான்கு மணிக்கு பரணிதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. மாலை, 6மணிக்கு அருகில் உள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர்கோவில், நெசவாளர்நகர் மகாலிங்கேஸ்வரர்கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், தீயனணப்பு நிலைய ஆருவணேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர்கோவில், அரூர் தீர்த்தமலை தீர்தகிரிஸ்வரர்கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், மொடக்கோரி மகாலிங்கேஸ்வரர்கோவில், பாலகோடு பால்வண்ணநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை, நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் மாலை, 6மணிக்கு மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வர மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், தீபத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4மணிக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வான வேடிக்கை நடந்தது.