உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதியமான்கோட்டை கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை!

அதியமான்கோட்டை கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை!

தர்மபுரி: தர்மபுரி அதியமான்கோட்டை தட்ஷிண கால பைரவர் கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், கால பைரவருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு, கால பைரவர் ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று கால பைரவர் ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை, தட்ஷிண கால பைரவர் கோவிலில், காலை முதல், கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடந்தது. லட்சார்ச்சணை உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, கால பைரவரை வழிப்பட்டுச் சென்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக, எலுமிச்சை, தேங்காய், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, தட்ஷிண காலபைரவரை வழிபட்டனர். இரவு, 10 மணிக்கு நடந்த குருதி பூஜையில், மிளகாய், மிளகு கொண்டு சிறப்பு யாகம் நடந்தது. கால பைரவர் ஜெயந்தி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கால பைரவர் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெறவும், மழை பாதிப்பு குறையவும், சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !