சபரிமலையில் குப்பை கொட்டினால் பக்தர்கள் கம்பி எண்ண வேண்டும்!
சபரிமலை: சபரிமலை பாதைகளில் குப்பைகளை வீசி எறிந்தால் அபராதத்ததுடன் சிறைத்தண்டனையும் அனுபவிக்கும் உத்தரவை பத்தணந்திட்டை கலெக்டர் பிறப்பித்துள்ளார். பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் ஹரிகிஷோர் பம்பை, சபரிமலை ஆகிய இடங்களில் நடந்து சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பல இடங்களிலும் குப்பை கூழங்கள் நிரம்பி கிடந்ததையும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததையும் கண்டார். இது தொடர்பாக அவர் சன்னிதானத்தில் தேவசம்போர்டு, போலீஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. பம்பையில் ஆடைகளை வீசினால் சிறைத்தண்டனை என்று அறிவித்த பின்னர் அது பெருமளவு கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது. எனவே அதே ஸ்டைலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் குப்பிகள் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட மாஜிஸ்திரேட் என்ற அடிப்படையில் சி.ஆர்.பி.சி.133 மற்றும் கேரள போலீஸ் ஆக்ட் செக்ஷன் 80 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறியுள்ளதாவது:
சிஆர்பிசி 133-ம் வகுப்பு படி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மீறி குப்பைகள் வீசினாலோ அல்லது அசுத்தம் செய்தாலோ ஐ.பி.சி. 188-வது பிரிவின் கீழ் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனை கிடைக்கும். சபரிமலையில் தற்போதைய நிலை சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் பக்தர்கள் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் காப்பதற்காக காக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட எஸ்.பி., ஆர்.டி.ஓ., சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட், அரசு துறை தலைவர்கள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.