தி.மலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்: மார்ச் மாதம் நடத்துவதில் சிக்கல்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலுக்கு, வரும் மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் பணிகள் தாமதமாவதால், குறிப்பிட்ட காலத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், 2002 ஜூன், 27 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம வழக்கத்தின்படி, 12 ஆண்டுகளுக்கு, ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அதனால், திருவண்ணாமலை கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
திருப்பணி துவக்கம்: இதையடுத்து, மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள், கடந்த ஜனவரி, 26ம் தேதி பாலாலயத்துடன் துவங்கியது. இதற்காக, 27 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, உபயதாரர்கள் பங்களிப்புடன் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போதுள்ள ஆட்சி காலம் முடிவதற்குள், திருப்பணிகளை நிறைவேற்றி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க அற நிலையத்துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகத்திற்கு அரசு அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், ஐந்து நாட்களை தேர்வு செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
பருவ மழையால் சிக்கல்: இந்நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை, தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர் மழையால், கோவில் கோபுரங்கள் மீது ஏறி, சீரமைப்பு பணி செய்வதிலும், வண்ணம் தீட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தீபத்திருவிழா காரணமாகவும் பணிகள் தடைபட்டது. கடந்த ஒரு மாதமாக, கோவில் உட்பிரகார சன்னதிகளில் மட்டுமே, சிறிய அளவிலான திருப்பணிகள் நடந்து வருகின்றன. ராஜகோபுரம் உள்ளிட்ட பிரதான, நான்கு கோபுரங்கள் சீரமைப்பு மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகள் நடைபெறவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதத்தில் பணிகளை முடித்து, கும்பாபிஷேகத்திற்கு தயாராக முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.