உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலைக்கு அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!

சதுரகிரி மலைக்கு அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.சதுரகிரி மலையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கமுடியாமல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதற்கு பின் மலைக்கு செல்ல மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்தனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் 4 நாட்கள் வீதம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் சென்று வருகின்றனர். சூடம் ஏற்றி வழிபாடு: இந்நிலையில் கடந்த பவுர்ணமி போது வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் மலைக்கு வந்தனர். மலைப்பகுதியில் உள்ள ஆறு, ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாரையும் அனுமதிக்கவில்லை. அடிவாரத்திலேயே சூடம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பினர். இன்று நடைபெறும் அமாவாசை வழிபாட்டிற்காவது செல்லலாம் என நேற்று முன்தினம் பிரதோஷ தினம் முதல் தினமும் பக்தர்கள் மலைக்கு வந்தபடி இருந்தனர். வாக்குவாதம்: ஆனால் இப்போதும் ஆறுகளில் நீர் குறையாததாலும், அவ்வப்போது மழை பெய்துவருவதாலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று காலை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்தனர். அவர்களை வனத்துறையினர், போலீசார் அனுமதிக்காததால் நீண்ட நேரம் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் காத்திருந்தனர். சில பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சமாதானம்: எஸ்.ஐ.,க்கள் அருண்பாண்டியன்(வத்திராயிருப்பு) ஜெயராமன்(சாப்டூர்)வனவர் சிவலிங்கம் உட்பட பலர் பக்தர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அடிவாரத்திலேயே பூஜைகளை செய்து வழிபட்டு ஏமாற்றத்துடன் ஊர்திரும்பினர். இன்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசார் அதிகஎண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனுமதி மறுப்பு: போலீசார் கூறுகையில் ,மலைப்பகுதியில் திடீரென அவ்வப்போது மழைபெய்து வருவதால் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காகவே அனுமதி மறுக்கப்படுகிறது. இதை புரிந்து கொண்டு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !