ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: யாக பூஜை ஜன., 15ல் ஆரம்பம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபி ஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜைகள் ஜன., 15ல் துவங்குவதாக இணை ஆணையர் தெரிவித்தார்.ராமேஸ்வரம் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜன., 20ல் நடை பெற உள்ளது. கிழக்கு, மேற்கு, தெற்கு ராஜகோபுரம், 1, 2 மற்றும் 3ம் பிரகாரங்களில் திருப்பணிகள் முடிந்துள்ளது. வடக்கு ராஜ கோபுரங்கள், பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு கருங்கல் மண்டபம் அமைத்தல், கோயில் விமானங்கள் மற்றும் பிரகாரங் களில் வர்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடக்கிறது. 15ம் தேதிக்குள் திருப்பணிகள் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஜன., 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இதற்கு கோயில் அருகில் உள்ள நந்த வனத்தில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழா வேதமந்திரம் முழங்க நேற்று நடந்தது.கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: ஜன.,20ல் ரோகிணி நட்சத்திரம், கும்ப லக்னத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக நந்தவனத்தில் ரூ.21 லட்சம் செலவில் 108 குண்டங்கள் அமைத்து, 216 சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க, தேவாரம், திருவாசகம் பஜனை பாடல்களுடன் ஜன., 15ல் கணபதி ஹோமமும் தொடர்ந்து 8 கால யாக பூஜைகள் நடைபெறும், என்றார்.கால்கோள் விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பேஷ்கார்கள், சிருங்கேரி மடம், காஞ்சி மடம் நிர்வாகிகள், ஸ்தபதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.